கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் செயற்கை நீருற்று; 'செல்பி' எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் செயற்கை நீருற்று அமைக்கப்பட்டுள்ளது. ‘செல்பி’ எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் செயற்கை நீருற்று அமைக்கப்பட்டுள்ளது. 'செல்பி' எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நட்சத்திர ஏரியில் படகுசவாரி
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில், சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைக்கும் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில் நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியும் ஒன்றாகும்.
கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இங்கு படகு சவாரி செய்து வருகின்றனர். மேலும் ஏரியை சுற்றிலும் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்து மகிழ்கின்றனர். சுற்றுலா பயணிகள் மற்றும் கொடைக்கானல் நகரவாசிகள் ஏரிச்சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ரூ.24 கோடியில் அபிவிருத்தி பணி
பல்வேறு சிறப்புக்கு சொந்தமான நட்சத்திர ஏரியில், ரூ.24 கோடி மதிப்பில் அபிவிருத்தி பணி நடந்து வருகிறது.
அதன்படி ஏரியை சுற்றி உள்ள நடைபாதை சீரமைத்தல், புதிய மின்விளக்குகள் பொருத்துதல், படகு சவாரி செய்வதற்காக அதிநவீன நடைமேடை அமைத்தல், புதிதாக 75 படகுகள் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
இந்தநிலையில் நட்சத்திர ஏரியில் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. சோதனை அடிப்படையில், தற்போது அந்த நீருற்றுகள் கடந்த 2 நாட்களாக இயக்கப்பட்டு வருகின்றன. நீருற்றுகளில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதோடு, செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
சீசன் தொடங்குவதற்கு முன்பு நட்சத்திர ஏரியில் அனைத்து பணிகளையும் நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டு முழு வீச்சாக நடந்து வருகிறது.