எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில்கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட மேல்முறையீடு முகாம்
எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில்கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட மேல்முறையீடு முகாம் நடந்தது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு முகாமில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
மேல்முறையீடு முகாம்
தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு முகாம் நேற்று நடந்தது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்து ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காத பெண்களிடம் சந்தேகங்களை கேட்டு, விண்ணப்பத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் முறையீடு மனுக்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வகையில் எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து விண்ணப்பங்களின் நிலை தொடர்பான குறைபாடுகளை நிவர்த்தி செய்திடவும், மேல்முறையீடு தொடர்பாக தெளிவுரை வழங்கிடவும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் திட்டத்தில் விண்ணப்பித்த ஏராளமான பெண்கள் முகாமிற்கு வந்து மேல்முறையீடு செய்தனர்.
கலெக்டர் ஆய்வு
இந்த முகாமை ஆய்வு செய்ய நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் எட்டயபுரம் தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். அங்கு நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வந்திருந்த பெண்களிடம் விசாரணை நடத்தினார். விணணப்பத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளித்த அவர், அவற்றை சரிசெய்து மேல்முறையீடு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அறிவுறுத்தினார்.
தொடர்ந்து முகாமில் பணியாற்றிய அலுவலர்களுக்கும் மேல்முறையீடு விண்ணப்பங்களை முறையாக பரிசீலனை செய்யவும், விண்ணப்பங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக முறையாக ஆலோசனைகள் வழங்கி திட்ட பலன் கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின் போது கோவில்பட்டி உதவி கலெக்டர் ஜேன் கிறிஷ்டி பாய், எட்டயபுரம் தாசில்தார் மல்லிகா உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்