கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்: முதல்-அமைச்சர் இன்று தொடங்கிவைக்கிறார்
கலைஞர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கிவைக்கிறார்.
சென்னை,
சட்டமன்ற தேர்தலின் போது, தமிழ்நாட்டில் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பெற்று, ஆட்சி அமைத்தது. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக ஆட்சி பொறுப்பேற்றதும், மகளிருக்கான உரிமைத்தொகை வழங்க முடியாமல் போனது. இதனை ஒரு துருப்புச்சீட்டாக வைத்து எதிர்க்கட்சிகளும் அவ்வப்போது இதுபற்றி குரல் எழுப்பியபடி இருந்தனர்.
இந்த நிலையில் ஒரு வழியாக மகளிர் உரிமைத்தொகை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கப்படும் என்று அரசு அறிவித்தது. மேலும் அந்த திட்டத்துக்கு கலைஞரின் பெயர் சூட்டப்பட்டு, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
வங்கி கணக்கில் மாதம் ரூ.1,000
வருகிற செப்டம்பர் மாதம் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், அந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட்டு, அந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய சில வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, வெளியிடப்பட்டன.
கடந்த 7-ந் தேதி இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனையும் நடத்தினார்.
இந்த திட்டத்தின் வாயிலாக முதல்கட்டமாக சுமார் ஒரு கோடி மகளிர் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை நேரடியாக செலுத்தப்பட உள்ளது. இதற்காக இந்த ஆண்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி இருக்கிறது.
முதல்-அமைச்சர் தொடங்கிவைக்கிறார்
இந்த திட்டங்களை பெற மகளிர் விண்ணப்பங்களை பதிவு செய்யவும், அதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்களையும், விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான முகாம் நடைபெறும் இடம், நாள் உள்ளிட்ட தகவல் அடங்கிய டோக்கனையும் ரேஷன் கடை ஊழியர்கள் வினியோகித்து வருகின்றனர்.
அதன்படி, விண்ணப்பங்களை பதிவு செய்யவும், பின்னர் அதனை பதிவேற்றம் செய்வதற்கும் தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்து 923 முகாம்கள் அரசு சார்பில் நடத்தப்பட உள்ளன. இதில் தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) தொடங்கிவைக்கிறார்.
மைல் கல்
அதன் பின்னர், முகாம் தொடங்கி வைக்கும் பள்ளிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து உரையாற்றுகிறார். இதற்காக சென்னையில் இருந்து சேலத்துக்கு விமானம் மூலம் சென்று, பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக தர்மபுரி செல்கிறார். விழா முடிந்ததும், மீண்டும் சென்னை திரும்புகிறார்.
இந்த திட்டத்தை மகளிரின் விலைமதிப்பில்லா பங்களிப்புக்கான சமூக அங்கீகாரம் என்றும், சுயமரியாதை பயணத்தில் ஒரு மைல் கல் என்றும் அரசு தெரிவித்து இருக்கிறது.