அழியும் நிலையில் உள்ள கலைகளை ஆவணப்படுத்த நடவடிக்கை- மனோ தங்கராஜ்


அழியும் நிலையில் உள்ள கலைகளை ஆவணப்படுத்த நடவடிக்கை- மனோ தங்கராஜ்
x

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்த தமிழ் இணைய மாநாடு தொடக்க விழாவில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், அழியும் நிலையில் உள்ள கலைகளை ஆவணப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

தஞ்சாவூர்

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்த தமிழ் இணைய மாநாடு தொடக்க விழாவில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், அழியும் நிலையில் உள்ள கலைகளை ஆவணப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

தமிழ் இணைய மாநாடு

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மொழியியல் துறை, பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம், உலக தமிழ்த்தகவல் தொழில்நுட்ப மன்றம், இந்திய மொழிகளின் நடுவண் மையம் ஆகியவை சார்பில் 21-வது தமிழ் இணைய மாநாடு நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவிற்கு துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை தாங்கினார். பதிவாளர் தியாகராஜன் வரவேற்றார்.

விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பழங்கால கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், இலக்கிய, வரலாறு, பண்பாடு, நாகரீகம் சார்ந்த பல ஆவணங்கள் நம்மிடம் உள்ளன. இவற்றையெல்லாம் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய சவால் நமக்கு இருக்கிறது. இவற்றை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆவணப்படுத்த நடவடிக்கை

தமிழக அரசு தமிழ்த்தொடர்பு மையத்தை அமைத்து வருகிறது. உலகில் பல்வேறு இடங்களில் இதுவரை 128 தமிழ்த் தொடர்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நமது கலைகள் அழிந்துவிடாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு தர வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. இதன் அடிப்படையில் சிலம்பாட்டம், நாட்டியம், நடனம், இசை, தெருக்கூத்து உள்ளிட்ட அழியும் நிலையில் இருக்கக்கூடிய கலைகளை ஆவணப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளோம்..

பல்வேறு சமயங்களை சார்ந்த திருத்தலங்களில் இருக்கக்கூடிய அற்புதமான கலை, போதிக்கப்பட்ட சித்தாந்தங்களை ஆவணப்படுத்துகிறோம். கற்றல், கற்பித்தல் திட்டத்தில் இந்த ஆண்டு முதுநிலைப் பட்டம் வழங்கவுள்ளோம். அதற்கான பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணி வருகிற மே மாதத்துக்குள் முடிவடைந்து விடும்.

புதிய தமிழ் இளங்கலை பட்டப்படிப்புக்கான பாடங்களை எழுதும் பணி நடைபெறுகிறது. முதுகலை தமிழ்ப் பட்டப்படிப்புக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநாட்டு மலரை துணைவேந்தர் திருவள்ளுவன் வெளியிட, பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினரும், பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பிரபாகரன் பெற்றுக்கொண்டார்.

இதில் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேலுசாமி, உலக தமிழ்த்தகவல் தொழில்நுட்ப மன்றத் தலைவர்(இலங்கை) தவரூபன், நிர்வாக இயக்குனர்(இந்தியா) பொன்னுசாமி, மாநாட்டுத் தலைவர் அப்பாசாமி முருகையன், துணைத்தலைவர் வாசு ரெங்கநாதன், தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல் துறைத் தலைவர் மங்கையற்கரசி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பதிவாளர் ஸ்ரீவித்யா நன்றி கூறினார்.


Next Story