ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
ஆருத்ரா தரிசன விழா
தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் ஆன்மிக மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில்தான் மாணிக்க வாசகர் அருளிய திருவெம்பாவை பாடல்களை பாடி பக்தர்கள் சிவன் கோவிலில் வழிபடுவார்கள்.
மேலும் மார்கழி மாத திருவாதிரை நாளில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். நடராஜருக்கு மார்கழி மாத திருவாதிரை நாளில் நடைபெறும் அபிஷேகம் மிகவும் விசேஷமானது ஆகும். அதன்படி வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்திருந்தனர்.
நடராஜர் வீதி உலா
ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு உற்சவ மூர்த்தி நடராஜருக்கு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, ஆதிநடராஜருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மகா அபிஷேகமும் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 6.30 மணிக்கு நடராஜர், சிவகாம சுந்தரி அம்மன் ஆகியோர் கோபுர தரிசனம் நடந்தது. பின்னர் திருவெம்பாவை பாடலை பக்தர்கள் பாடினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து மண்டி வீதி, கிருபானந்தவாரியார் சாலை, அண்ணாசாலையில் சாமி வீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனத்தினர் செய்திருந்தனர்.
இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.