கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா
விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர், செஞ்சி கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.
விழுப்புரம்:
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடராஜபெருமானுக்கு ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி காலை 7 மணியளவில் கோவிலில் உள்ள சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு பால், தயிர், நெய், இளநீர், பன்னீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 14 வகையான திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பகல் 12 மணியளவில் நடராஜருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, கோவில் வளாகத்தை சுற்றி உற்சவர் வலம் வந்தார்.
பக்தர்கள் சாமி தரிசனம்
இதில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாலையிலும் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இதேபோல் விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர், திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர், பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது.
செஞ்சி அருணாசல ஈஸ்வரர்
செஞ்சி பீரங்கி மேட்டில் உள்ள அருணாசல ஈஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிவகாமிசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு மூலிகை பொடி, விபூதி, பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், மஞ்சள், சந்தனம், நெல்லி பொடி, நெய் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிருபாபுரீஸ்வரர் கோவில்
திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதையொட்டி நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் ஊர்வலமாக வந்து காட்சி அளித்தார்.