ஆறுமுகநேரி வாளவிளை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ஆறுமுகநேரி வாளவிளை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி வாளவிளை வடக்கு தெரு முத்தாரம்மன் கோவிலில் 3 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேக விழா தொடங்கியது. முதல் நாளில் மங்கள இசை உடன் தொடங்கிய பூஜையில் திருமுறை பாராயணம், விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், பஞ்சகவ்யபூஜை, மகா கணபதி ஹோமம், சுதர்சன் ஹோமம், உட்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் புனித நீர் எடுத்து வந்து வாஸ்து சாந்தி, பிரவேச பலி, திக்பலி, திசா ஹோமம், கிராம சாந்தி தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து மாலையில் முதல் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.
இரண்டாவது நாள் திருமுறை பாராயணம், இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. மாலையில் திருமுறை பாராயணம், மூன்றாம் கால யாகசாலை பூஜையும், மூலமந்திர ஹோமமும் பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. மூன்றாம் நாளான நேற்று அதிகாலையில் 3 மணி அளவில் மங்கல இசை உடன் திருமுறை பாராயணம் ஓதி, நான்காம் கால யாக சாலை பூஜையும், நாடி சந்தானம், திரவ்யாதி தீபாராதனை நடந்தது. காலை 5.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 10 மணிக்கு கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலில் உள்ள முத்தாரம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து பகல் 12 மணிக்கு மகேஸ்வர பூஜையும் அன்னதானமும் நடைபெற்றது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் கும்பாபிஷேக கமிட்டி தலைவர் எஸ்.கார்த்தீசன், செயலாளர் டி. சிவசங்கர், பொருளாளர் ஆர்.தினகர பாண்டியன் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.