ஆறுமுகநேரியில்பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
ஆறுமுகநேரியில் பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி ரெயில்வே நிலையம் அருகில் எரியூட்டம் மின்தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று பொதுமக்கள் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மின்தகன மேடை
ஆறுமுகநேரி ரெயில் நிலையம் அருகில் அரசு சார்பில் நகர பஞ்சாயத்து மூலம் ரூ.1.42 கோடியில் இறந்தவர்களின் உடல்களை எரியயூட்டும் மின்தகன மேடை மற்றும் அதை சுற்றி பூங்கா அமைக்க டெண்டர் விடப்பட்டது. அன்று முதல் செல்வராஜபுரம், மேல சண்முகபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் அப்பகுதியில் மின் தகன மேடை அமைக்க கூடாது என்றும், இதனால் காற்று மாசுபடும், பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
பணி நிறுத்திவைப்பு
இப்பகுதியில் மின்தகன மேடை அமைக்க கூடாது என்று கலெக்டரிடம் நேரில் கோரிக்ைக மனுவும் கொடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் குறிப்பிட்ட அந்த இடத்தில் மின் தகன மேடை அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் வாணம் தோண்டும் பணி நடந்தது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் அந்த இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அப்பகுதிக்கு ெசன்ற ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அரசு தரப்பில் இப்பிரச்சினை குறித்து பேசி முடிவெடுக்கலாம் என்று அந்த பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
சாலை மறியல்
இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் செல்வராஜபுரம் பகுதி மக்கள் ஆறுமுகநேரி ரெயில்வே கேட் அருகே ஆழ்வார் திருநகரி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த சாலையில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கனவே அந்த பணியை செய்ய வேண்டாம் என்று நிறுத்தி உள்ள நிலையில் பொதுமக்கள் முன்அறிவிப்பின்றி சாலை மறியலில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தினார். இதுகுறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள பொக்லைன் எந்திரத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். உடனடியாக அந்த எந்திரம் மாற்று இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டுகலைந்து சென்றனர்.
இந்த சாலைமறியல் போராட்டத்தால் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.