ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு
ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், ஆறுமுகநேரியில் உள்ள பழமை வாய்ந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு நடத்தினார். ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சீனிவாசன், டாக்டர்கள் நந்தினி, சுருதி ஆகியோர் கலெக்டரை வரவேற்றனர். அதனை தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள அனைத்து பதிவேடுகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
செவிலியர்களை அழைத்து பதிவேடுகள் பராமரிக்கின்ற விதம் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள், மருந்துகள் இருப்பு எவ்வாறு உள்ளது?, மருந்துகளின் தேவைகளை மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்து கூறும் பதிவேடுகள் ஆகியவற்றை அவர் கேட்டறிந்தார்.
மேலும் நோயாளிகளை தேடி இல்லம் தேடி மருந்து கொடுக்கும் திட்டம் செயல்படுத்துவதை பற்றியும் கேட்டறிந்தார். மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு, ஸ்கேன் செய்யும் இடம், ரத்த பரிசோதனை செய்யும் இடம் உள்பட அனைத்து பிரிவுகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். மருத்துவமனையில் உள்ள சுகாதார வளாகங்களையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நோயாளிகளிடம் குறை கேட்பு
தொடர்ந்து அங்கு தொழு நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் மற்றும் தொழுநோயாளிகளுக்கு தேவையான பொருட்களை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார். மேலும் மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகளிடம் குறைகள் கேட்டறிந்தார்.
பின்னர் ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடந்த ஆண்டுக்கான தேசிய தர உத்தரவாத சான்றிதழை மருத்துவமனை டாக்டர் சீனிவாசனிடம் கலெக்டர் வழங்கி பாராட்டினார். மேலும் மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த ஆறுமுகநேரி கீழசண்முகபுரம் அருந்ததியர் காலனியை சேர்ந்த மக்களின் கோரிக்கை மனுவை பெற்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இந்த ஆய்வின் போது திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பொற்செல்வன், தொழுநோய் பிரிவு மற்றொரு சுகாதாரத்துறை துணை இயக்குனர் யமுனா ஆகியோர் உடனிருந்தனர்.