பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி


பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி
x
திருப்பூர்


உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பஞ்சலிங்க அருவி

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தில் அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகள் நீராதாரமாக உள்ளது. வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகளில் நீர்வரத்து ஏற்படுகிறது. ஆறுகள் வனப்பகுதியில் பல்வேறு விதமாக பிரிந்து ஓடினாலும் இறுதியில் பஞ்சலிங்க அருவியில் ஒன்று சேர்ந்து விடுகின்றது.

அப்போது நீர் வழித்தடங்களில் உள்ள மூலிகைகள் மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கில் தானாகவே கரைந்து விடுகிறது. இதன் காரணமாக அருவியில் விழுகின்ற தண்ணீர் அதிக சுவையுடன், மூலிகை குணத்தையும் நறுமணத்தையும் கொண்டு உள்ளது.

அருவியில் குளிப்பதால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதுடன் மன அழுத்தம் குறைந்து விடுகிறது. இதனால் அதில் குளித்து புத்துணர்வு பெருவதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

நள்ளிரவில் வெள்ளம்

இந்த சூழலில் கடந்த 30-ந் தேதி இரவு பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக 31-ந் தேதி அதிகாலை 2 மணியளவில் பஞ்சலிங்க அருவியில் உள்ள தடுப்புகளை தாண்டி வெள்ளம் கொட்டியது.அந்த தண்ணீர் அடிவாரப்பகுதியில் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட மும்மூர்த்திகள் சுயம்புவாக எழுந்தருளியுள்ள குன்று, சப்தகன்னிமார் கோவில், விநாயகர், சுப்பிரமணியர் கோவிலை சூழ்ந்தவாறு திருமூர்த்தி அணையை அடைந்தது.

அத்துடன் அருவியில் தண்ணீர் சீற்றம் அதிகரித்து காணப்பட்டதாலும் கனமழை பெய்வதற்கான சூழல் நிலவியதாலும் நேற்று முன்தினம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது. இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் கோவில் முன்பு உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி சென்றனர்.

குளிக்க அனுமதி

இந்த நிலையில் நேற்று வெள்ளத்தின் சீற்றம் தணிந்ததால் மதியத்திற்கு மேலாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் வானம் மேகமூட்டமாக காணப்பட்டதால் வழக்கமான நேரத்துக்கு முன்பாகவே அருவிக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டது. மேலும் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.


Next Story