பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் திரண்டனர்


பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் திரண்டனர்
x
திருப்பூர்


திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் திரண்டனர். சூரிய கிரகணத்தையொட்டி கோவிலிலின் நடை சாத்தப்பட்டது.

பஞ்சலிங்க அருவி

உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல்குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலைஆறு, கிழவிப்பட்டிஆறு, உப்புமண்ணபட்டிஆறு, பாலாறு, உழுவியாறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது. வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகளில் நீர்வரத்து ஏற்படுகிறது. வனப்பகுதியில் பல்வேறு வழிகளில் ஓடிவருகின்ற ஆறுகளில் இறுதியில் பஞ்சலிங்க அருவியில் ஒன்று சேர்ந்து விடுகின்றது.

வனப்பகுதியில் உள்ள மூலிகைகள் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அதில் தானாகவே கரைந்து விடுகிறது.இதன் காரணமாக அருவியில் விழுகின்ற தண்ணீர் அதிக சுவையுடன் நறுமணத்தையும் அளிக்கிறது. அருவியில் குளிப்பதால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதுடன் மன அழுத்தம் குறைந்து விடுகிறது. இதனால் அதில் குளித்து புத்துணர்வு வருவதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் பெய்த தென்மேற்கு பருவமழைக்கு பின்பும் அவ்வப்போது குறிப்பிட்ட இடைவெளியில் மழை பெய்து வந்தது. இதனால் பஞ்சலிங்க அருவியில் நீராதாரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியிலும் நிலையான நீர்வரத்து இருந்து வருகிறது.

இந்த சூழலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வருகை தந்தனர்.பின்னர் அனைவரும் பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்காக உற்சாகமாக சென்றனர்.இதனால் அருவி பகுதி மக்கள் வெள்ளமாக காட்சி அளித்தது. அத்துடன் அனைவரும் வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் இயற்கை சூழலை ரசித்ததுடன் குடும்பம் குடும்பமாக அமர்ந்து வீடியோ செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

கோவில் நடை சாத்தப்பட்டது

நேற்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தை முன்னிட்டு அமணலிங்கேஸ்வரர், சுப்பிரமணியர், விநாயகர் கோவிலில் மதியம் 1 மணியளவில் நடை சாத்தப்பட்டது.

இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நாளை காலை வழக்கம்போல் கோவில் திறக்கப்பட்டு தூய்மை பணிகள் நிறைவு செய்த பின்பாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


Next Story