பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு


பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு
x
திருப்பூர்


வனப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளபொருக்கு ஏற்பட்டுள்ளது. அமராவதி அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

அமராவதி அணை

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளை ஆதாரமாகக் கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகள் மழைக்காலங்களில் நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர், கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக அமராவதி அணைக்கு தொடர் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளதால் கடந்த 2 வாரமாக அணை அதன் முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. இதையடுத்து அணைப்பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் கரையோர கிராமங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

வெள்ளப்பெருக்கு

இந்த சூழலில் நேற்று மதியம் பெய்த பலத்த மலையின் காரணமாக நேற்று மாலையில் அணைக்கு ஏற்பட்ட நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியை கடந்தது. அதைத் தொடர்ந்து அணையில் உள்ள 9 கண் மதகுகள் வழியாக உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். நீர்வரத்து அதிகரித்தால் அதற்கு ஏற்றபடி 17 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதேபோன்று உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியிலும் பலத்த மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வெள்ளப்பெருக்கு அருவியில் உள்ள தடுப்புகளை தாண்டி ஆக்ரோசத்துடன் கொட்டி வருகிறது. அந்த வெள்ளம் அடிவாரப் பகுதியில் உள்ள சப்தகன்னிமார் கோவில் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள குன்றை சூழ்ந்தவாறு திருமூர்த்தி அணையை அடைந்தது.

சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தொடர் மழையின் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுஉள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அமராவதி அணை மற்றும் பஞ்சலிங்க அருவியில்ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை பார்ப்பதற்காக சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர்.

பின்னர் வெள்ளப்பெருக்கை புகைப்படம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டும் உறவினர்களுக்கு அனுப்பியும் மகிழ்ந்தனர். தளி அமராவதி பகுதியில் பெய்து வருகின்ற தொடர் மழையின் காரணமாக பொதுமக்கள் 2-வது நாளாக வீடுகளில் முடங்கி இருந்தனர்.


Next Story