ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் வத்தல் விலை உயரும்
ஏற்றுமதி அதிகரிப்பால் அடுத்து வரும் வாரங்களில் வத்தல் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஏற்றுமதி வணிகர்கள் தெரிவித்தனர்.
ஏற்றுமதி அதிகரிப்பால் அடுத்து வரும் வாரங்களில் வத்தல் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஏற்றுமதி வணிகர்கள் தெரிவித்தனர்.
வத்தல் இறக்குமதி
இதுபற்றி அவர்கள் மேலும் கூறியதாவது:-
வழக்கமாக இந்தியாவில் இருந்து அதிகமாக வத்தல் இறக்குமதி செய்யும் சீனாவில் மழை காரணமாக 30 முதல் 40 சதவீதம் வத்தல் சாகுபடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த மே மாதம் வரை அதிகமாக இந்தியாவில் இருந்து வத்தல் இறக்குமதி செய்த சீனா மே மாதத்திற்கு பிறகு வத்தல் இறக்குமதியை குறைத்து இருந்தது.
தற்போது சீனாவில் வத்தல் இருப்பு 2 ஆயிரம் கண்டெய்னர்களில் இருந்து 500 கண்டெய்னர்களாக குறைந்து விட்ட நிலையில் சீனா மீண்டும் இந்தியாவில் இருந்து வத்தல் இறக்குமதியை அதிகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஏற்றுமதி
மேலும் மலேசியாவில் இருந்தும் வத்தல் இறக்குமதியை அதிகரித்து வருகிறது. கடந்த 2018- 2019-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 4 லட்சத்து 60 ஆயிரம் டன் வத்தல் ரூ.5,411 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
2019- 2020-ம் ஆண்டு 4 லட்சத்து 96 ஆயிரத்து 900 டன் ரூ.6,710 கோடிக்கும் 2020 -2021-ம் ஆண்டில் 6 லட்சத்து, 49 ஆயிரத்து 815 டன் வத்தல் ரூ.9,246 கோடிக்கும், 2021 -2022-ம் ஆண்டு 5 லட்சத்து 87 ஆயிரத்து 134 டன் ரூ. 8 381 கோடிக்கும், 2022-2023-ம் ஆண்டு 5 லட்சத்து 16 ஆயிரம் டன் ரூ. 10, 444 கோடிக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
விலை உயரும்
தற்போது சீனா மீண்டும் வத்தல் இறக்குமதி செய்ய தயாராகி உள்ள நிலையில் அடுத்து வரும் வாரங்களில் வத்தல் விலை உயர வாய்ப்பு ஏற்படும். உடனடியாக கிலோ ரூ. 10 வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் வத்தல் அதிகமாக சாகுபடியாகும் மாநிலங்களான ஆந்திராவில் தலா 40 கிலோ கொண்ட 60 லட்சம் வத்தல் மூடைகளும், தெலுங்கானாவில் 27 லட்சம் வத்தல் மூடைகளும், கர்நாடகாவில் 30 லட்சம் வத்தல் மூடைகளும் இருப்பு உள்ள நிலையில் குறிப்பிட்ட வத்தல் ரகங்கள் குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.2,400 வரை விலை உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.