தாயாருக்கு அடைக்கலம் கொடுத்ததால்பாட்டியை கொன்றேன்


தாயாருக்கு அடைக்கலம் கொடுத்ததால்பாட்டியை கொன்றேன்
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கருங்கல் அருகே மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தாயாருக்கு அடைக்கலம் கொடுத்ததால் பாட்டியை கொலை செய்தேன் என கைதான வாலிபர் போலீசில் வாக்குமூலம் அளித்தார்.

கன்னியாகுமரி

கருங்கல்:

கருங்கல் அருகே மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தாயாருக்கு அடைக்கலம் கொடுத்ததால் பாட்டியை கொலை செய்தேன் என கைதான வாலிபர் போலீசில் வாக்குமூலம் அளித்தார்.

மூதாட்டி கொலை

கருங்கல் அருகே உள்ள மங்கலக்குன்று பாலவிளையை சேர்ந்தவர் தங்கப்பழம் (வயது77). இவர் தன்னுடைய கணவர் இறந்த நிலையில் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இவருடைய மூத்த மகள் தங்கம் அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தங்கத்தின் மகன் ஷாஜின் (33), வேலைக்கு ஏதும் செல்லாமல் இருந்து வந்தார். மேலும் மது பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி தாயிடம் சண்டை போட்டு அடித்து உதைப்பது வழக்கம். அப்போது தங்கம் தனது தாயான தங்கப்பழம் வீட்டுக்கு சென்று அடைக்கலம் புகுவது வழக்கம்.

இந்தநிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு ஷாஜின் வீட்டுக்கு வந்த போது தாயார் இல்லாததால் அருகில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு அவரை தேடி சென்றார். அங்கு தாயார் இல்லாததால் ஆத்திரம் அடைந்த ஷாஜின் அங்கிருந்த மர நாற்காலியால் தங்கபழத்தை அடித்து கொலை செய்தார்.

வாக்குமூலம்

இதையடுத்து கருங்கல் போலீசார் ஷாஜினை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நான் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு தாயார் தங்கத்திடம் தகராறு செய்து கடுமையாக தாக்குவேன். இதனால் தாயார் அடிக்கடி எனது பாட்டியின் வீட்டிற்கு சென்று அடைக்கலம் புகுவார். இது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இந்தநிலையில் சம்பவத்தன்று எனது தாயார் பக்கத்து வீட்டில் அடைக்கலம் புகுந்திருந்தார். அன்று மாலை முதல் இரவு வரை வீட்டில் காத்திருந்தும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் எனக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

மர நாற்காலியால் அடித்தேன்

அவர் பாட்டி தங்கப்பழத்தின் வீட்டிற்கு தான் சென்றிருப்பார் என நினைத்து நள்ளிரவு 2 மணிக்கு பாட்டியின் வீட்டிற்கு சென்றேன். அவரிடம் எனது தாயார் எங்கே? என்று கேட்டேன். அதற்கு அவர், 'உனது தாயார் இங்கு வரவில்லை' என்று கூறினார். இதை நான் நம்பாமல், 'எனது தாயாரை மறைத்து வைத்து விட்டு நடிக்கிறாயா?. நீ உயிருடன் இருந்தால் தானே அடைக்கலம் கொடுப்பாய்' எனக்கூறி அருகில் இருந்த மர நாற்காலியை எடுத்து அடித்து கொலை செய்தேன்'

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story