நீட் மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என தமிழக கவர்னர் பேசியது கண்டிக்கத்தக்கது - மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டி


நீட் மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என தமிழக கவர்னர் பேசியது கண்டிக்கத்தக்கது - மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டி
x

நீட் மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என தமிழக கவர்னர் பேசியது கண்டிக்கத்தக்கது என மாணிக்கம் தாகூர் எம்.பி.குற்றம் சாட்டினார்.

மதுரை

திருப்பரங்குன்றம்,


நீட் மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என தமிழக கவர்னர் பேசியது கண்டிக்கத்தக்கது என மாணிக்கம் தாகூர் எம்.பி.குற்றம் சாட்டினார்.

இந்தி திணிப்பு

மதுரை திருநகர் மீனாட்சி தெருவில் உள்ள விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் ஏமாற்றமாக அமைந்தது. மணிப்பூர் பிரச்சினை பற்றி பிரதமர் மோடி பேச வேண்டும் என்பதுதான் இந்தியா கூட்டணியின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில் மோடி பேசியது பிரதமர் பேசியது போல் இல்லை. பா.ஜ.க. தலைவர்போல பேசி இருக்கிறார்.

ராகுல் காந்தியின் பேச்சை நாடாளுமன்றத்தில் பதிவு செய்யவிடாமல் பா.ஜ.க.வினர் கூச்சலிட்டது வருத்தமளிக்கிறது. 75 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில் இல்லாத ஒன்றாக எதிர்க்கட்சி தலைவர் அதிரஞ்சன் சவுத்ரியை சஸ்பெண்ட் செய்து இருக்கிறது. நாடாளுமன்றம் தற்போது மன் கி பாத் மன்றமாக மாறிவிட்டது. இந்தியை திணிக்கின்ற வகையில் 3 சட்டங்களையும் இந்தியில் பெயர் மாற்றம் செய்து அதை அறிமுகம் செய்து இருப்பது மோடியும், அமித்ஷாவும் ஒரு தலை பட்சமாக செயல்படுவதை காட்டுகிறது.

நீட் தேர்வு

நீட் தேர்வு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என்று கவர்னர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. நீட்தேர்வு தொடர்பாக நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் குரல் கொடுக்கவில்லை என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி கூறி இருப்பது வேடிக்கையாக உள்ளது. கர்நாடகாவில் டி.கே.சிவக்குமார் தண்ணீர் இருந்தால் கொடுப்போம், இல்லை என்றால் கொடுக்க மாட்டோம் என்று கூறியதை கண்டிக்கிறோம். காவிரி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் 100 சதவீதம் தமிழக அரசின் நிலைக்கு துணை நிற்போம்.

எய்ம்ஸ் 2026-ல் திறக்கப்படும் என்று கூறுகிறார்கள். கட்டுமான பணி தொடங்கினால் தானே திறப்பதற்கு? எய்ம்ஸ் விஷயத்தில் பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது. கப்பலூர்சுங்கசாவடி 3 மாதத்தில்அகற்றப்படும் என்றனர், ஆனால் கண்டுகொள்ளவில்லை. மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவை நிலையும் அதோகதியாக இருக்கிறது.

எங்கள் தொகுதிக்கான பிரச்சினைகளை பேசாத பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எங்களை கேள்வி கேட்பதற்கோ, குறை சொல்வதற்கோ அருகதை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது மதுரை காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தனக்கன்குளம் எம்.பி.எஸ்.பழனிக்குமார், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் துரைநடராஜன், மாவட்ட தலைவர் பொன் மகாலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story