கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தேவைக்கு ஏற்ப ஆக்சிஜன், மருந்துகள் உள்ளன


கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தேவைக்கு ஏற்ப ஆக்சிஜன், மருந்துகள் உள்ளன
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தேவையான அளவிற்கு ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் இருப்பு உள்ளது என டீன் பிரின்ஸ் பயஸ் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தேவையான அளவிற்கு ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் இருப்பு உள்ளது என டீன் பிரின்ஸ் பயஸ் கூறினார்.

கொரோனா பரவல் அதிகரிப்பு

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகள், மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகள், வட்டார அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கு வரும் டாக்டர்கள், நர்சுகள், நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவ ஊழியர்கள் என அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டா்கள், செவிலியா்கள், பணியாளர்கள், மருத்துவ மாணவர்கள் ஆகியோர் நேற்று முக கவசம் அணிந்து பணிபுரிந்தனர். மேலும் நோயாளிகள் மற்றும் அவர்களை பார்க்க வருவோரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

முக கவசம் அணிந்து...

அதேபோல தக்கலை, குழித்துறை அரசு ஆஸ்பத்திரிகள், கோட்டார் ஆயுர்வேத ஆஸ்பத்திரி மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவ கட்டமைப்புகளில் பணியாற்றும் டாக்டா்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் நேற்று முகக் கவசம் அணிந்து பணியாற்றினர்.

இதுதொடர்பாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி டீன் பிரின்ஸ் பயஸ் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 104 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த பகுதியில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மக்களின் ஒத்துழைப்பு

முதல் கட்டமாக 100 படுக்கைகளுடன் இந்த வார்டு தயார் நிலையில் உள்ளது. தேவைப்படும் பட்சத்தில் படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தற்போது கொரோனா வார்டில் ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார். லேசான பாதிப்பு கண்டறியப்பட்ட நபர்கள் வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பரவும் பட்சத்தில் நோயாளிகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் தேவைக்கேற்ப ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ளன.

கூட்டம் அதிகமுள்ள இடங்களில் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். சளி மற்றும் காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகள், சுகாதார நிலையங்களில் சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story