பவானிசாகர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்குவதால் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பு
உபரி நீர் திறப்பு
பவானிசாகர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்குவதால் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
உபரிநீர் திறப்பு
நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் நேற்று முன்தினம் இரவு 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.50 அடியை எட்டியது. மேலும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் இரவு 8 மணியில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 500 கனஅடியில் இருந்து தொடங்கி உபரிநீர்திறப்பு அதிகரிக்கப்பட்டது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.70 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 587 கன அடி தண்ணீர் வந்தது. பவானி ஆற்றில் உபரி நீராக வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
வெள்ள அபாய எச்சரிக்கை
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது முறையாக முழு கொள்ளளவான 105 அடியை நெருங்குகிறது. 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டியது. அதன்பின்னர் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி 105 அடியை தொடர்ந்து எட்டியது. 2021-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி அணையின் நீர்மட்டம் 104.85 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 4-வது ஆண்டாக நேற்று அணையின் நீர்மட்டம் 104.70 அடியை எட்டியுள்ளது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 105 அடியை நெருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் பொதுப்பணித்துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.