கிடப்பில் போடப்பட்டு 4 ஆண்டுகளாகியும் கட்டுமான பணிகள் நடக்காததால் அங்கன்வாடி மையமாக செயல்படும் சமுதாய நலக்கூடம் பாதுகாப்பில்லாததால் குழந்தைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோர்


கிடப்பில் போடப்பட்டு 4 ஆண்டுகளாகியும் கட்டுமான பணிகள் நடக்காததால்  அங்கன்வாடி மையமாக செயல்படும் சமுதாய நலக்கூடம்  பாதுகாப்பில்லாததால் குழந்தைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோர்
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே கிடப்பில் போடப்பட்டு 4 ஆண்டுகளாகியும் கட்டுமான பணிகள் நடக்காததால் சமுதாய கூடம் அங்கன்வாடி மையமாக செயல்படுகிறது. அங்கு பாதுகாப்பில்லாததால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுக்கின்றனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே உள்ள பரவலூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்காக, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இந்த அங்கன்வாடி மையத்திற்காக கடந்த 2019-ம் ஆண்டு புதிதாக கட்டிடம் கட்டும் பணி, அங்குள்ள சமுதாய நல கூடத்தின் அருகே தொடங்கப்பட்டது.

ஆரம்பத்தில் விறு விறுப்பாக நடந்த கட்டிடம் கட்டும் பணி, அதன் பிறகு முழுமை பெறுவதற்குள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக பணிகள் நடக்காமல், அந்த கட்டிடம் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளது.

பாதுகாப்பு இல்லை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், கட்டிட பணியை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அங்கன்வாடி மையத்திற்கு என்று தனியாக கட்டிடம் ஏதும் இல்லாததால், அப்பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் தான் அங்கன்வாடி மையமாக செயல்பட்டு வருகிறது.

அங்கு 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த சமுதாய நலக்கூடத்தில் குழந்தைகள் அமர்ந்திருந்த போது திடீரென ஒரு நாகபாம்பு புகுந்தது. இதனால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.

குழந்தைகளை அனுப்ப மறுப்பு

இதனால் பெற்றோர், தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப மறுக்கின்றனர். தற்போது ஒரு சில குழந்தைகள் மட்டுமே அங்கு வந்து செல்கின்றனர். மேலும் அப்பகுதியில் சுப காரியங்கள் நடைபெறும் போது, இந்த சமுதாய நலக்கூடத்தில் தான் நடத்தப்படுகிறது. அந்த சமயங்களில் அங்கன்வாடி மையத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இதனால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கிடப்பில் போடப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை விரைந்து கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.


Next Story