மீன்கள் செத்து மிதந்ததால்கனிராவுத்தர் குளத்தை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது
கனிராவுத்தர் குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது
ஈரோடு கனிவுராத்தர் குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் குளத்தை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது.
கனிராவுத்தர் குளம்
ஈரோடு கனிராவுத்தர்குளம் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. இந்த குளத்தின் கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தனியார் நிதி பங்களிப்புடன் குளம் சீரமைக்கப்பட்டது. குளத்தின் கரையில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதியும், கடந்த மாதம் 27-ந் தேதியும் கனிராவுத்தர் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்தது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாய, சலவை பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் குளத்தில் கலந்ததால், மீன்கள் செத்து மிதந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் குளத்தில் ஆய்வு செய்தனர். மேலும், தண்ணீரை ஆய்வுக்காக எடுத்தனர்.
ஆகாயத்தாமரைகள் அகற்றம்
இந்தநிலையில் கனிராவுத்தர் குளத்தை தூய்மைப்படுத்து் பணி நேற்று தொடங்கியது. குளத்தில் உள்ள தண்ணீரில் ஆகாயத்தாமரைகள் படர்ந்து காணப்பட்டன. எனவே தொழிலாளர்கள் கயிறு கட்டி ஆகாயத்தாமரையை தண்ணீர் வெளியேறும் பகுதிக்கு கொண்டு வந்தனர். அங்கு பொக்லைன் எந்திரம் மூலமாக ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டன.
இதேபோல் கனிராவுத்தர் குளத்தில் கழிவுநீர் கலப்பதை நிரந்தரமாக தடுக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.