விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் நிலையில் திருத்தணியில் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் நிலையில் திருத்தணியில் விநாயகர் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
திருத்தணி,
விநாயகர் சதுர்த்தி பண்டிகை அடுத்த மாதம் 18-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளில் விநாயகர் சிலைகளை வீடு மற்றும் பொது இடங்களில் வைத்து பொதுமக்கள் வழிபடுவது வழக்கம்.
பின்னர் 3 முதல் 5-வது நாளில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைத்து விடுவர். இந்நிலையில் பொது இடங்களில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் திருத்தணியில் நடைப்பெற்று வருகிறது.
குறிப்பாக சித்தூர் சாலை, பை-பாஸ் சாலை, அரக்கோணம் சாலை, ஆகிய இடங்களில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சிலை தயாரிப்பாளர்கள் கூறுகையில், தயார் செய்யும் விநாயகர் சிலைகள் அனைத்தும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் ரசாயனம் பயன்படுத்தாமல் தயாரிக்கப்படுகிறது. இந்த சிலைகள் 1 அடி முதல் 12 அடி வரை வடிவமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளின் விலை 100 ரூபாய் முதல் 15 ஆயிரம் வரை உள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் தொழில் கடந்த சில ஆண்டுகளாக முற்றிலும் பாதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு விநாயகர் சிலை விற்பனை ஜோராக இருக்கும் என சிலை தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.