கிராம உதவியாளர் தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைத்தளத்தில் வெளியானதால் பரபரப்பு- மாற்று வினாத்தாள் மூலம் தேர்வு நடந்தது
மதுரையில் நடந்த கிராம உதவியாளர் பதவிக்கான தேர்வு வினாத்தாள், சமூக வலைத்தளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், மாற்று வினாத்தாள் மூலம் தேர்வு நடத்தப்பட்டது.
மதுரையில் நடந்த கிராம உதவியாளர் பதவிக்கான தேர்வு வினாத்தாள், சமூக வலைத்தளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், மாற்று வினாத்தாள் மூலம் தேர்வு நடத்தப்பட்டது.
கிராம உதவியாளர் தேர்வு
மதுரை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களில், காலியாக உள்ள 209 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கு, 13 ஆயிரத்து 958 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் நேற்று அதற்கான திறனறி தேர்வுகள் நடைபெற்றது.
இந்த நிலையில் கிராம உதவியாளர் தேர்வுக்காக ஏராளமானவர்கள் காத்திருந்த நிலையில், திடீரென நேற்று முன்தினம் நள்ளிரவில் மதுரை தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தேர்வு மையத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆங்கிலத் திறனறி தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ தொடங்கியது. மேலும் இதனை பதிவிட்டவர்கள், மொத்த வினாத்தாள்களையும் பெற ரூ.10 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதிய வினாத்தாள்
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகத்தினர், உடனடியாக புதிய வினாத்தாள்களை தயார் செய்து தேர்வு எழுத வந்தவர்களுக்கு கொடுப்பதாக அறிவித்தனர். மேலும் வினாத்தாள்களை கசிய விட்டவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இதுகுறித்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், ஜெராக்ஸ் எடுக்க சென்ற இடத்தில் இந்த வினாத்தாள்கள் கசிந்ததாக தெரியவருகிறது. அதன் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் போலீசிலும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வினாத்தாளை கசிய விட்ட சம்பவம் தொடர்பாக, தெற்கு தாசில்தார் கல்யாணசுந்தரத்தை, நிர்வாக காரணங்களுக்காக பணியில் இருந்து விடுவித்துள்ளதாக கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2,693 பேர் வரவில்லை
இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட கிராம உதவியாளர் திறனறி தேர்வு 22 மையங்களில் அமைதியான முறையில் நடந்தது. இதற்காக விண்ணப்பதாரர்கள் நேற்று காலை 9 மணி முதலில் தேர்வு மையத்துக்கு வரத் தொடங்கி விட்டனர். அங்கு அவர்களிடம் ஹால் டிக்கெட் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வுகள் காலை 10 மணி முதல் 11 மணி வரை தேர்வு நடந்தது. இதில் முதல் அரை மணி நேரம் தமிழ் எழுத்து திறனறி தேர்வும், அடுத்த அரை மணி நேரம் ஆங்கில எழுத்து திறனறித் தேர்வும் நடந்தது. இதனை ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் எழுதி சென்றனர்.
13 ஆயிரத்து 958 பேருக்கு தேர்வுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், 11 ஆயிரத்து 265 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீதமுள்ள 2 ஆயிரத்து 693 பேர் தேர்வு எழுதவரவில்லை.