கல்குவாரியில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறை துகள்கள் வீடுகள் மீது விழுந்ததால் பரபரப்பு


கல்குவாரியில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறை துகள்கள் வீடுகள் மீது விழுந்ததால் பரபரப்பு
x

நிலக்கோட்டை அருகே கல்குவாரியில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறை துகள்கள் வீடுகள் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே முசுவனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட மிளகாய்பட்டி, முசுவனூத்து ஆகிய 2 கிராமங்களுக்கு இடையே தனியார் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் அடிக்கடி பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு வருகிறது.

அப்போது எழும் பலத்த வெடி சத்தம் மிளகாய்பட்டி, முசுவனூத்து கிராம மக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் வெடி வைத்து தகர்க்கப்படும்போது, பாறை துகள்கள் வீடுகள் மீது விழுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் கல்குவாரியை மூட வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று கல்குவாரியில் வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்பட்டன. அப்போது பலத்த வெடிசத்தம் கேட்டதால் மிளகாய்பட்டி மற்றும் முசுவனூத்து கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் கல்குவாரியில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறை துகள்கள் பறந்து வந்து வீடுகள் மீது விழுந்தன.

இதில் சிலரது வீட்டின் மேற்கூரைகள் சேதமடைந்தன. இதனால் வீடுகளை விட்டு வெளியே வந்து, வீதிகளில் கிராம மக்கள் தஞ்சம் அடைந்தனர். எனவே கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கல்குவாரியை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் இதுதொடர்பாக கிராம மக்கள் மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story