நீர்வரத்து குறைந்ததால், ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர்.
ஒகேனக்கல்,
கர்நாடக, கேரளா ஆகிய மாநிலங்களில் பருவ மழை காரணமாக கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக அதிகளவில் நீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் பிலிக்குண்டுலு வழியாக தமிழகத்திற்கு வந்தடையும். இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
தற்போது பருவமழை பெய்யாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்ததாலும், தற்போது ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6,500 கனஅடியாக இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து சற்று சரிந்து 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இன்று விடுமுறை நாள் என்பதால் தருமபுரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு குவிந்தனர்.
இதன் காரணமாக பரிசல் நிலையம், மீன் கடைகள், கடைவீதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டன. சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்தும், எண்ணை மசாஜ் செய்து அருவிகளில் குளித்தும் மகிழ்ந்தனர்.