வெளி மாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளி சந்தை வெறிச்சோடியது
ஜவுளி சந்தை
வெளி மாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளி சந்தை வெறிச்சோடியது.
ஜவுளி சந்தை
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே ஈரோடு கனி ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இரவில் ஜவுளி சந்தை கூடி வருகிறது. மராட்டியம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் ஜவுளி கொள்முதல் செய்து செல்வார்கள்.
இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் உள்ளூர் வியாபாரிகள் அதிக அளவில் வந்து துணிகளை வாங்கி செல்வது வழக்கம். சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் கூடுதலாக வியாபாரம் நடைபெறும்.
வெறிச்சோடியது
கடந்த வாரம் தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளி வியாபாரம் அமோகமாக இருந்தது. வெளி மாநில வியாபாரிகள் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் அதிக அளவில் வந்து ஜவுளிகளை மொத்தமாக வாங்கி சென்றனர். இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவில் கூடிய சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் ஒரு சிலர் மட்டுமே வந்திருந்தனர். இதனால் ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. இதன் காரணமாக மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதே நேரம் தொடர் முகூர்த்தம் காரணமாக சில்லறை வியாபாரம் ஓரளவு நடைபெற்றது. சில்லறை வியாபாரம் 25 சதவீதமும், மொத்த வியாபாரம் 10 சதவீதமும் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.