பேரூராட்சி அலுவலகத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய ஆசாமி


பேரூராட்சி அலுவலகத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய ஆசாமி
x

ஆரல்வாய்மொழியில் பேரூராட்சி அலுவலக வளாகத்திற்குள் புகுந்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம ஆசாமி ஆவரைகுளம் அருகே நிறுத்திவிட்டு வேறொரு ஸ்கூட்டரில் தப்பி சென்றார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழியில் பேரூராட்சி அலுவலக வளாகத்திற்குள் புகுந்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம ஆசாமி ஆவரைகுளம் அருகே நிறுத்திவிட்டு வேறொரு ஸ்கூட்டரில் தப்பி சென்றார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மோட்டார் சைக்கிள் மாயம்

ஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலகத்தில் குடிநீர் பணியாளராக இருப்பவர் முருகன் (வயது42). இவர் சம்பவத்தன்று காலை 11 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்திவிட்டு சாவியை எடுக்காமல் அலுவலகத்தின் உள்ளே சென்றார்.

பின்னர் சிறிது நேரத்தில் வெளியே வந்து பார்த்தபோது அவருடைய மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கண்காணிப்பு கேமரா காட்சி

தொடர்ந்து அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டார். அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இதுகுறித்து முருகன் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் உடனடியாக சோதனை சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளை திருடி வந்த ஆசாமி சோதனை சாவடியை கடக்காமல் ரெயில்நிலைய சாலைவழியாக செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

மற்றொரு ஸ்கூட்டர் திருட்டு

இதற்கிடையே மோட்டார் சைக்கிளை திருடி சென்ற நபர் அதை நெல்லை மாவட்டம், ஆவரைகுளம் அருகே உள்ள சவுந்தரலிங்கபுரம் பகுதியில் ஒரு பள்ளியின் அருகே சாவியுடன் நிறுத்தினார். பள்ளியின் உள்ளே பெண் பணியாளர் ஒருவர் தனது ஸ்கூட்டரை நிறுத்தியிருந்தார். அந்த ஸ்கூட்டரை ஆசாமி திருடி விட்டு தப்பி சென்றுள்ளார். பெண் பணியாளர் திரும்ப வந்த போது தனது ஸ்கூட்டர் திருடப்பட்டதை அறிந்து திடுக்கிட்டார். அதேநேரத்தில் வேறொரு மோட்டார் சைக்கிள் சாவியுடன் நிற்பதை கண்டார். அந்த மோட்டார் சைக்கிளில் இருந்த ஆவணங்களை பார்த்த போது அது ஆரல்வாய்மொழி பேரூராட்சி பணியாளர் முருகனுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.

போலீசார் கைப்பற்றினர்

இதுகுறித்து கூடங்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் ெகாடுக்கப்பட்டது. கூடங்குளம் போலீசார் மோட்டார் சைக்கிளை கைப்பற்றிவிட்டு ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு தகவல் ெகாடுத்தனர். ஆரல்வாய்மொழி போலீசார் கூடங்குளம் சென்று மோட்டார் சைக்கிளை கைப்பற்றி கொண்டு வந்து உரியவரிடம் ஒப்படைத்தனர். அத்துடன் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் ேதடி வருகிறார்கள்.

ஆரல்வாய்மொழியில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

---------



Next Story