ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்று
அனைத்து வசதிகளுடன் கூடிய பிரசவ வார்டுக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு மத்திய அரசின் தேசிய தரச்சான்று கிடைத்துள்ளது என்று டீன் பிரின்ஸ் பயஸ் தெரிவித்தார்.
நாகர்கோவில்:
அனைத்து வசதிகளுடன் கூடிய பிரசவ வார்டுக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு மத்திய அரசின் தேசிய தரச்சான்று கிடைத்துள்ளது என்று டீன் பிரின்ஸ் பயஸ் தெரிவித்தார்.
ஆய்வறிக்கை
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் தினமும் ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகளும், நூற்றுக்கணக்கான உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பல்வேறு சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளும், தொற்றா நோய் பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிசு மற்றும் மகளிர் மருத்துவ மையத்தில் பிரசவ வார்டு மற்றும் அறுவை சிகிச்சை அரங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த மே மாதம் தேசிய தரச்சான்று மதிப்பீடு செய்யும் குழு ஒன்று ஆய்வு மேற்கொண்டது. பின்னர் அவர்கள் ஆய்வறிக்கையை மத்திய அரசின் மக்கள் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையிடம் சமர்ப்பித்தது.
தேசிய தரச்சான்று
அதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு லக்சயா தேசிய தரச்சான்றிதழை அறிவித்துள்ளது. அதில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய பிரசவ வார்டு மற்றும் அறுவை சிகிச்சை அரங்குக்கும் லக்சயா தேசிய தரச்சான்று கிடைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச்செயலாளர் விஷால் சவுகான் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி டீன் பிரின்ஸ் பயஸ் கூறியதாவது:-
பெருமை
கார்ப்பரேட்டு மருத்துவமனைகளைப் போன்று ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள சிசு மற்றும் மகளிர் மருத்துவ மையத்தில் செயல்படும் பிரசவ வார்டு மற்றும் அறுவைச் சிகிச்சை அரங்கு நவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் தர மதிப்பீடு செய்ய வந்த குழுவினர் பிரசவ வார்டுக்கு 100-க்கு 94 மதிப்பெண்களும், அறுவைச் சிகிச்சை அரங்குக்கு 100-க்கு 90 மதிப்பெண்களும் அளித்து பிளாட்டினம் தர வரிசை அளித்துள்ளனர். இதன்காரணமாக மத்திய அரசின் தேசிய தரச்சான்றான லக்சயா தேசிய தரச்சான்று கிடைத்துள்ளது. இது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது.
இதற்காக எங்களுடன் ஒருங்கிணைந்து பாடுபட்ட டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனை ஊழியர்கள், ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கும் நோயாளிகள், பொதுமக்கள் அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.