விழிப்புணர்வு பாடல் பாடி அசத்திய மாணவர்கள்


விழிப்புணர்வு பாடல் பாடி அசத்திய மாணவர்கள்
x

பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பாடல் பாடி அசத்திய மாணவர்களின் வீடிேயா சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டை

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்க 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் மஞ்சப் பை திட்டம் தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பிளாஸ்டிக் பயன்பாடு சற்று குறைந்தது. மேலும் மத்திய அரசும் கடந்த ஜூலை மாதம் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு நாடு முழுவதும் தடை விதித்தது.

இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கத்தை விட அதிகமாக பிளாஸ்டிக் பொருட்கள் தமிழகம் முழுவதும் மலை போல் குவிந்துள்ளது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது மன வேதனையை ஏற்படுத்துவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்திருந்தார்.

விழிப்புணர்வு பாடல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள களபம் கிராமத்தை சேர்ந்த கிராமிய கலைஞர் இளவரசன். இவர், பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த எ.மாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் முத்துச்செல்வன், உருமராஜா ஆகிய 2 மாணவர்கள் தாளம், இசையோடு கிராமிய பாடல் பாடி அசத்தி உள்ளனர்.

வீடிேயா வைரல்

அந்த பாடலில் பிளாஸ்டிக் பொருட்கள் மண் வளத்தை கெடுப்பது மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் கேடு விளைவிக்கிறது. மஞ்சப் பை எடுத்துச்செல்ல யாரும் வெட்கப்படக் கூடாது, பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் மக்காமல் மண்ணின் தன்மையை கெடுத்து விடும், அதனால் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக நாம் தவிர்க்க வேண்டும் என்ற கருத்து இடம் பெற்றுள்ளது. இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story