துறவறம் செல்லும் இளம்பெண், சிறுவன்
திருப்பத்தூரில் துறவறம் செல்லும் இளம்பெண் மற்றும் சிறுவன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
துறவறம்
திருப்பத்தூரில் துறவறம் செல்லும் இளம் பெண் மற்றும் 14 வயது சிறுவன் அலங்கரிக்கப்பட்டு குதிரை பூட்டிய வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
திருப்பத்தூர் செட்டித்தெருவை சேர்ந்த பன்னாலால் கோத்தம் சந்த் பேத்தியும், ரத்தன்சந்த் என்பவரது மகள் இளம்பெண் சுஷ்மா, சுனில்குமார் மகன் சம்ரத் (வயது14) ஆ௳ிய இருவரும் துறவறம் செல்கிறார்கள். அதற்காக நேற்று செட்டி தெருவில் இளம் பெண்சுஷ்மா மற்றும் சிறுவன் சம்ரத் ஆகிய இருவருக்கும் ராஜா அலங்காரம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அழைத்து வரப்பட்டனர்.
அதற்கு முன் மகாவீர் சாமி அலங்கரிக்கப்பட்டு ஒரு வாகனத்திலும், இசைக் கச்சேரி ஒரு வாகனத்திலும் என நான்கு குதிரைகள் பூட்டிய வண்டிகள் செல்ல மேள தாளத்துடன் பெண்கள் நடனமாடியும், கலர் சாய போடி களை தூவியும் ஊர்வலமாக செட்டி தெருவில் இருந்து ஆலங்காயம் ரோடு நகைக்கடை பஜார், கச்சேரி தெரு வழியாக வந்ததனர்.
ஏழைகளுக்கு வழங்கினர்
ஊர்வலத்தில் பேனா, தொப்பி, உடைகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். துறவறம் ஏற்கும் சுஷ்மா மற்றும் சம்ரத், மகிழ்ச்சியுடன் நடனமாடி பணம், தங்க நகைகள் மற்றும் உடைகளை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கினார்கள். ஊர்வலம் சேலம் மெயின் ரோடு வழியாக சென்று அங்குள்ள திருமண மண்டபத்தை அடைந்ததும் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரிய குரு பரம பூஜ்ய ஆச்சாரிய பகவான் மணிபிரப சூரிஸ்வர்ஜிசாத்வி, சுலோசனா, ஸ்ரீஜீ அர்ன் மற்றும் 20 ஆண் குருமார்கள் மற்றும் 17 பெண் குருமார்கள் சமய சொற்பொழிவு நடைபெற்றது.
அப்போது துறவறம் ஏற்கும் சுஷ்மா மற்றும் சம்ரத் இருவரிடம் துறவறம் குறித்து குருமார்கள் விளக்கிப் பேசினார்கள். அவர்கள் பேசியதாவது:-
துறவறம் ஏற்கும் தாங்கள் குடும்பம் அனைத்தையும் திறக்க வேண்டும், கடவுள் அன்பு, சேவை மட்டுமே தங்களுடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அனைவருக்கும் நல்ல எண்ணங்களை எடுத்துக் கூற வேண்டும். கடவுளுக்கு தொண்டாற்றுவதை முழுமூச்சாக செய்ய வேண்டும் என பேசினர். தொடர்ந்து பக்தி பாடல்கள் பாடப்பட்டது.
முன்னதாக திருப்பத்தூர் தொகுதி நல்லதம்பி எம்.எல்.ஏ. கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். தி.மு.க. நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன் உள்பட ஏராளமானோர் இந்தியா முழுவதிலிருந்து கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) சத்திய வாக்கு பெற்று இருவருக்கும் மொட்டை அடித்து, வெள்ளை உடை அணிந்து துறவறம் அடைகிறார்கள்.