ஆசிய அளவிலான கராத்தே போட்டி
ஆசிய அளவிலான கராத்தே போட்டியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
அலிடிராகன் கராத்தே அகாடமி சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் ஆசிய அளவிலான 2 நாள் கராத்தே மற்றும் சிலம்ப போட்டி நேற்று கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். கராத்தே போட்டி ஒருங்கிணைப்பாளர் யூசுப் அலி வரவேற்று பேசினார்.
இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட 11 மாநிலங்கள் மற்றும் மாலத்தீவு ஆகிய பகுதிகளில் இருந்து 700 வீரர்கள் பங்கேற்று உள்ளனர். போட்டிகள் 10 வயதிற்கு உட்பட்டவர்கள், 13 வயதுடையவர்கள், 16, 17 வயதுடையவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என 5 பிரிவுகளில் நடக்கிறது.
மேலும் தனிப்போட்டிகள், குழு போட்டிகள், கட்டா போட்டிகள் என நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மாவட்ட கவுன்சிலர் ஆவரைகுளம் பாஸ்கர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன், ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாலத்தீவு கராத்தே பயிற்சியாளர் பாத்திமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.