இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா


இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா
x

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அதன்படி தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ் உரிமை நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜரத்தினம் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கராவை சந்தித்து மனு கொடுக்க வந்திருந்தனர்.

அப்போது அவர்கள் திடீரென்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ராஜரத்தினம் நிருபர்களிடம் கூறுகையில், 'மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக எங்கள் சங்கத்தில் இருப்பவர்கள் போராடி வருகிறோம். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 9 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதற்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றிய 4 கலெக்டர்களிடமும் இதுகுறித்து கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இன்று அதாவது (நேற்று) 43 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறோம்' என்றார்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி கோதை செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி ரங்கநாதன் ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் அவர்களிடம் கூறுகையில், 'உங்களுடைய கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாதம் இலவச வீட்டுமனை பட்டா பட்டியல் வெளியிடப்படும். அதில் தகுதியானவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

இதில் சமாதானம் அடைந்த மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய தர்ணா போராட்டத்தை கைவிட்டு விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ராஜகோபால் சுன்கராவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

மேலும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story