'தங்கரத புறப்பாடு' கட்டணத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்த கருத்து கேட்பு
பழனி முருகன் கோவிலில் ‘தங்கரத புறப்பாடு' கட்டணத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்துவது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் கருத்து கேட்கப்பட உள்ளது.
பழனி முருகன் கோவில்
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
இவ்வாறு வருகை பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்துதல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர். இதேபோல் கோவிலில் உள்ள தங்கரத புறப்பாடு, தங்க தொட்டில் உள்ளிட்ட வழிபாடு முறைகளிலும் கலந்து கொள்கின்றனர்.
இதில் தங்கரத புறப்பாடு என்பது பழனி முருகன் கோவிலில் தினமும் இரவு 7 மணிக்கு நடைபெறும். இதில் கலந்துகொள்ள ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். அல்லது தங்கரத புறப்பாட்டில் கலந்துகொள்ளும் நாளன்று மாலை 5 மணிக்குள் நேரில் வந்து பதிவு செய்யலாம். இதில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் குத்துவிளக்கு, முருகன் படம், பஞ்சாமிர்தம், சர்க்கரை பொங்கல், பித்தளை விளக்கு, தேங்காய், பழம், லட்டு, பழனி தல வரலாறு, எவர்சில்வர் குடம் உள்பட பல்வேறு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.
தங்கரத புறப்பாடு
இந்நிலையில் கோவில் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டு உள்ளது. அந்த நோட்டீசில் கூறியிருப்பதாவது:-
பழனி முருகன் கோவிலில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள திட்டம் தயாரித்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எனவே தற்போதைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு தங்கரத புறப்பாடு கட்டணத்தை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
இதில் பக்தர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை அல்லது ஆலோசனை கருத்துகள் இருந்தால் எழுத்து பூர்வமாக அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதிக்குள் கோவில் அலுவலகத்தில் நேரடியாக கொடுக்கலாம் அல்லது இணை ஆணையர், தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கலாம். 15-ந்தேதிக்கு பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.