பட்டாசு ஆலை தொழிலாளர்களிடம் கருத்து கேட்பு
குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் தொடர்பாக கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் வெள்ளிக்கிழமை தொழிலாளர்துறை அதிகாரிகள் கருத்து கேட்பு நடத்தினர்.
கோவில்பட்டி:
குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் தொடர்பாக கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் நேற்று தொழிலாளர்துறை அதிகாரிகள் கருத்து கேட்பு நடத்தினர்.
ஊதியம் மறுநிர்ணயம்
பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறு நிர்ணயம் செய்வது தொடர்பாக கருத்து கேட்பு நிகழ்ச்சி கோவில்பட்டி அருகே கிழவிபட்டியிலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று நடந்தது.
மதுரை தொழிலாளர் துறை கூடுதல் ஆணையாளர் தி. குமரன் தலைமையில் விருதுநகர் தொழிலாளர் துறை கூடுதல் ஆணையாளர் காளிதாஸ், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை உதவி இயக்குனர் ஸ்ரீதரன், தொழிற்சங்க பிரதிநிதிகள் மாடசாமி, சமுத்திரம், தேவா, தொழிற்சாலை அதிபர்கள் காமரின் விஜய் ஆனந்த் மற்றும் கண்ணன், கணேசன், செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்து கேட்பு
இவர்கள் பட்டாசு தொழிற்சாலை தொழிலாளர்களிடம் குறைந்தபட்ச ஊதியம் மறு நிர்ணயம் செய்வது தொடர்பாக கருத்துக் கேட்பு நடத்தினா். அப்போது, தங்களுக்கு விரைவாக ஊதியத்தை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள், சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் கருத்து கேட்க புறப்பட்டு சென்றனர்.