பஸ் வசதி கேட்டு போக்குவரத்து அலுவலகத்தைமுற்றுகையிட்ட மாணவர்கள்


பஸ் வசதி கேட்டு போக்குவரத்து அலுவலகத்தைமுற்றுகையிட்ட மாணவர்கள்
x
தினத்தந்தி 18 Aug 2023 1:15 AM IST (Updated: 18 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், பஸ் வசதி கேட்டு போக்குவரத்து அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்

முற்றுகை

திண்டுக்கல்லை அடுத்த மீனாட்சிநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் திருச்சி பைபாஸ் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக திண்டுக்கல் மண்டல அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்திய மாணவர் சங்க மாவட்டக்குழு தலைவர் முகேஷ் தலைமையில் மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது, திண்டுக்கல்லை அடுத்த குரும்பபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மீனாட்சிநாயக்கன்பட்டியில் செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் முறையான பஸ் வசதி இல்லாமல் அவர்கள் அவதிப்படுகின்றனர்.

தற்காலிக பஸ் வசதி

தற்போது பள்ளி வழித்தடத்தில் அரசு பஸ்சை இயக்குவதற்காக தார்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. ஆனால் அதுவரை மாற்றுப்பாதையில் அரசு பஸ்களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதையடுத்து அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் டேனியல் சாலமனிடம் மாணவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மாணவர்களின் கோரிக்கை குறித்து அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளரிடம் கேட்ட போது, கடந்த 3 மாதத்துக்கு முன்பு மீனாட்சிநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வழித்தடத்தில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன் பேரில் அந்த பள்ளி வழித்தடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். அப்போது சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை சேதமடைந்து கரடு, முரடாக இருப்பது தெரிய வந்தது.

மாற்றுப்பாதையில்...

எனவே சாலை வசதியை ஏற்படுத்திய பிறகு அந்த வழித்தடத்தில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தோம். தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த பணிகள் முடிந்ததும் மீனாட்சிநாயக்கன்பட்டி வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படும். அதுவரை மாற்றுப்பாதையில் பஸ்களை இயக்க சாத்தியக்கூறுகள் குறைவாகவே இருக்கிறது என்றார்.


Related Tags :
Next Story