மே மாதம் விடுமுறை கேட்டு அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்


மே மாதம் விடுமுறை கேட்டு அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x

மே மாத விடுமுறை வழங்கக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

மே மாத விடுமுறை வழங்கக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுமார் 2 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றி வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவிந்தனர். தொடர்ந்து அங்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு சங்க மாவட்ட தலைவர் ராதாமணி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில துணைத்தலைவர் மணிமாலை, மாநில குழு உறுப்பினர் பூங்கொடி ஆகியோர் பேசினர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து பேசினார். மாவட்ட செயலாளர் சாந்தி வரவேற்று பேசினார்.

மே மாதம் விடுமுறை

பள்ளி, கல்லூரிகளுக்கு மே மாதம் விடுமுறை அளிக்கப்படுவது போன்று அங்கன்வாடி பணியாளர்களுக்கும் மே மாதம் விடுமுறை வழங்க வேண்டும். தமிழகத்தில் தற்போது குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் நலன்கருதியும், குழந்தைகள் நல பணியாளர்கள் நலன் கருதியும் மே மாதம் கோடை விடுமுறை அளிக்க வேண்டும்

மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

பரபரப்பு

மேலும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 10 ஆண்டுகள் பணிசெய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஒரு வருடம் தமிழக அரசு வழங்குவது போல் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Related Tags :
Next Story