சம்பள உயர்வு கேட்டுநெசவாளர்கள் வேலை நிறுத்தம்
சம்பள உயர்வு கேட்டு நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பள உயர்வு
ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் கிராமங்களில் நெசவு முதன்மை தொழிலாக நடைபெற்று வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான நெசவாளர்கள் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள விசைத்தறி கூடங்கள் மூலம் பல்வேறு காட்டன் ரக சேலைகள் மற்றும் பேன்சி ரக சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் வசிக்கும் நெசவாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு பேச்சுவார்த்தை அடிப்படையில் வழங்கப்படும். அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை விசைத்தறி தொழிலாளர்களுக்கு போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் நேற்று முன்தினம் முடிவடைந்தது.
வேலை நிறுத்தம்
இந்நிலையில் சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதி நெசவாளர்கள் 50 சதவீத சம்பள உயர்வு, 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும், விசைத்தறி கூடங்களில் குடிநீர் கழிப்பிட வசதி எற்படுத்தி தரவேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால் தற்போது வரை பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஒப்பந்தம் போடப்படவில்லை. இதனால் டி.சுப்புலாபுரம் பகுதி நெசவாளர்கள் நேற்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக வேட்டி, சேலை உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல சக்கம்பட்டி பகுதி நெசவாளர்களும் விரைவில் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது-. இதற்கிடையே நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் நெசவு தொழிலாளர்கள்-தறிக்கூட உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.