மைத்துனர் மீது தாக்குதல்; போலீசார் விசாரணை
மைத்துனர் மீது தாக்குதல் நடத்தியவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 31). இவர் அதே ஊரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் அருகில் உள்ள வீராக்கன் கிராமத்தை சேர்ந்த தெய்வசிகாமணி மகள் சூரியா என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சம்பவத்தன்று கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராஜா ஜெயங்கொண்டத்தில் இருந்து அரியலூர் செல்ல பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சூரியாவின் அண்ணன் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ராஜாவை தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ராஜா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.