நாகர்கோவில் அருகே கல்லூரி மாணவி மீது தாக்குதல் தோழியின் பெற்றோர் மீது வழக்கு
நாகர்கோவில் அருகே கல்லூரி மாணவி மீது தாக்குதல் நடத்திய தோழியின் பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலகிருஷ்ணன்புதூர்:
நாகர்கோவில் அருகே கல்லூரி மாணவியை தாக்கியதாக, அவரின் தோழியின் பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கல்லூரி மாணவி மீது தாக்குதல்
நாகர்கோவில் அருகே பறக்கையை அடுத்த வண்டிகுடியிருப்பை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தற்போது பிளஸ்-2 முடித்து விட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பேஷன் டெக்னாலஜியில் சேர்ந்துள்ளார். இவருடன் படித்த அதே பகுதியை சேர்ந்த சக தோழி நாகர்கோவில் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் சேர்ந்துள்ளார். இவர்கள் 2 பேரும் நெருங்கிய தோழிகளாக இருந்த நிலையில் இவர்களின் குடும்பத்தினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு பேசி கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நெருங்கிய தோழிகள் என்பதால் 2 பேரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வது வழக்கம். அதே போல் சம்பவத்தன்று கல்லூரி செல்வதற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக தோழிகள் 2 பேரும் நாகர்கோவில் வந்து, பொருட்களை வாங்கிக் கொண்டு சுமார் 2 மணி நேரம் கழித்து ஊருக்கு சென்றனர். அப்போது பி.காம் சேர்ந்துள்ள மாணவியின் பெற்றோர், எனது மகளை எப்படி நீ அழைத்து செல்வாய் என்று கேட்டனர். பின்னர் மகளின் தோழியை சரமாரியாக தாக்கினர். இதில் அந்த மாணவி படுகாயம் அடைந்தார்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து மாணவி சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பி.காம் மாணவியின் தந்தை, தாயார் மற்றும் சித்தி ஆகிய 3 பேர் மீதும் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.