கவுன்சிலர் கணவர் மீது தாக்குதல்
பழனி அருகே பாலசமுத்திரத்தில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் கவுன்சிலரின் கணவரை சிலர் தாக்கினர். இதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி அருகே பாலசமுத்திரத்தில் உள்ள பவளக்கொடி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று காலை மஞ்சள்நீராட்டு விழா நடந்தது. அப்போது பக்கத்து தெரு பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் அங்கு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதை 3-வது வார்டு கவுன்சிலர் மகாலட்சுமியின் கணவரான நாகராஜ் (வயது 40) என்பவர் தட்டி கேட்டார்.
அப்போது தகராறில் ஈடுபட்டவர்கள், திடீரென நாகராஜை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த 3-வது வார்டு பகுதி மக்கள், பாலசமுத்திரம்-பழனி சாலை பகுதிக்கு திரண்டு வந்தனர். பின்னர் நாகராஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனால் பாலசமுத்திரம்-பழனி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தள்ளு, முள்ளு
தகவல் அறிந்த பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். ஆனால், தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதற்கிடையே கவுன்சிலரின் கணவரை தாக்கியதாக கூறப்படும் நபர்களில் ஒருவரை போலீசார் பிடித்து, அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி போராட்டம் நடக்கும் இடத்துக்கு கொண்டு வந்தனர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்களில் சிலர் அந்த வாலிபரை தாக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
பேச்சுவார்த்தை
இதற்கிடையே பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர்கள் தென்னரசு (தாலுகா), உதயக்குமார் (டவுன்) ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாகராஜை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.