மளிகைக்கடைக்காரர் மீது தாக்குதல்; 4 பேருக்கு வலைவீச்சு
தட்டார்மடம் அருகே மளிகைக்கடைக்காரரை தாக்கிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள பெரியதாழை அழகுவேல் நாடார் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 38). அங்கு மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த வெள்ளகண்ணு மகன் பாலமுருகன் (47) என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் இசக்கிமுத்துவின் சகோதரி அங்குள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்தார். இதை பாலமுருகன் சத்தம் போட்டு தடுத்தார். இதை இசக்கிமுத்து கண்டித்தார். இதற்கிடையே நேற்றுமுன்தினம் மளிகைக் கடையை இசக்கிமுத்து திறக்க வந்தார். அப்போது கடை வாசலில் அடையாளம் தெரியாத 3 பேர் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் கடையை திறக்க வேண்டும், எழுந்திருங்கள் என்று இசக்கிமுத்து கூறியுள்ளார். ஆனால் அவர்கள் இசக்கிமுத்துவை அவதூறாக பேசியதோடு, ஹெல்மெட் மற்றும் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர், சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குரூஸ் மைக்கேல் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் உள்பட 4 பேரை தேடி வருகிறார்.