நாட்டாண்மை மீது தாக்குதல்; 2 பேர் கைது
நாட்டாண்மையை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இட்டமொழி:
வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள படப்பார்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சித்திரைவேல் (வயது 53). ஊர் நாட்டாண்மை. இவர் நிர்வகித்து வந்த அம்மன் கோவிலில் தசரா திருவிழாவிற்காக கோவில் சாவியை பூசாரியிடம் கொடுத்து வைத்து இருந்தார். மேற்படி சாவியை பூசாரியிடம் இருந்து அதே ஊரை சேர்ந்த பொன்னையா மகன் சங்கர், பரமசிவம் மகன் சேர்மத்துரை ஆகியோர் பிடுங்கி இனிமேல் நாங்கள்தான் கோவிலை நிர்வாகம் செய்வோம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்திரைவேல், 2 பேரிடமும் சாவியை கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சங்கர், சேர்மத்துரை சேர்ந்து சித்திரைவேலை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதுபற்றிய புகாரின் பேரில் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சங்கர், சேர்மத்துரை ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.