ஓடும் ரெயிலில் போலீஸ்காரர் மீது தாக்குதல்
சேலம் அருகே ஓடும் ரெயிலில் போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் அருகே ஓடும் ரெயிலில் போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ்காரரிடம் தகராறு
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி கே.சி.பி. நகரை சேர்ந்தவர் ராஜவேலு (வயது 34). இவர், ஈரோட்டில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். கடந்த 11-ந் தேதி ஜோலார்பேட்டையில் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இவர் ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயிலில் சென்றார். அந்த ரெயில், சேலத்தை கடந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது, போலீஸ்காரர் ராஜவேலுவின் தலையில் ஒரு வாலிபர் காலால் மிதித்து விட்டதாகவும், இதனால் அந்த வாலிபரை தட்டி கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் பொம்மிடி ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது, அங்கு மேலும் 3 பேர் ஏறினர்.
தாக்குதல்
பின்னர் அவர்கள் போலீஸ்காரர் ராஜவேலுவிடம் தகராறு செய்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரும் அடுத்த ரெயில் நிலையத்தில் இறங்கி தப்பி ஓடிவிட்டனர். பின்னர் ரெயிலில் இருந்த சக பயணிகள், ராஜவேலுவை மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில், ஓடும் ரெயிலில் போலீஸ்காரரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியது, தர்மபுரி மாவட்டம் பொம்மிடி வினோபாஜி தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (29), சக்தி சரவணன் (24), பாலமுரளி, உதயகுமார் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேர் மீதும் ஆபாசமாக பேசி தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்பட 3 பிரிவுகளின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் வெங்கடேஷ், சக்தி சரவணன் ஆகிய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பாலமுரளி, உதயகுமார் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.