பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் மீது தாக்குதல்


பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் மீது தாக்குதல்
x

திருச்சியில் நடந்த யுவன்சங்கர் ராஜா இன்னிசை நிகழ்ச்சியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் மீது தாக்குதல் நடத்திய பாதுகாவலர்கள் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருச்சி

திருச்சியில் நடந்த யுவன்சங்கர் ராஜா இன்னிசை நிகழ்ச்சியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் மீது தாக்குதல் நடத்திய பாதுகாவலர்கள் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இன்னிசை நிகழ்ச்சி

திருச்சி அருகே மொராய் சிட்டியில் கடந்த 11-ந்்தேதி யுவன்சங்கர் ராஜாவின் இன்னிசை கச்சேரி நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக ஏராளமானோர் சென்று இருந்தனர்.

திருச்சி புத்தூர் ராமலிங்க நகர் 1-வது தெருவை சேர்ந்த திருச்சி மாவட்ட குற்றப்பிரிவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் அஜிம் என்பவரது மகன் முகமது ஹரிஷ் (வயது 20) தனது உறவினருடன் சென்று இருந்தார். முகமது ஹரிஷ் வல்லம் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

தாக்குதல்

இந்நிலையில் மொராய் சிட்டியில் நடந்த இன்னிசை நிகழ்ச்சியின் போது, பார்வையாளர்களுக்கும், அங்கு இருந்த பாதுகாவலர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது, பாதுகாவலர்கள் பார்வையாளர்களை தாக்கினார்களாம். இதில் முகமது ஹரிஷின் உறவினரும் தாக்கப்பட்டுள்ளார். இதை தட்டிக்கேட்ட முகமது ஹரிஷை பாதுகாவலர்கள் பிளாஸ்டிக் சேர், இரும்பு கம்பி, கம்பு, கைகளால் தாக்கி உள்ளனர்.

10 பேர் மீது வழக்குப்பதிவு

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து முகமது ஹரிஷ் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் மொராய் சிட்டியில் நடந்த இன்னிசை நிகழ்ச்சியில் தன்னை தாக்கியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

அதன்பேரில் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட பாதுகாவலர்கள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story