முன்விரோதத்தில் ஒன்றிய கவுன்சிலர் மீது தாக்குதல்
கொள்ளிடம் அருகே முன்விரோதத்தில் ஒன்றிய கவுன்சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே முன்விரோதத்தில் ஒன்றிய கவுன்சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கவுன்சிலர் மீது தாக்குதல்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மகேந்திரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவபாலன் (வயது 47).கொள்ளிடம் ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கொள்ளிடத்திலிருந்து மகேந்திரபள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். ஆரப்பள்ளம் கிராமம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அப்பகுதியிலிருந்து வந்த கார் ஒன்று சிவபாலனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சிவபாலன் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அப்போது காரில் இருந்த மகேந்திரப்பள்ளியை சேர்ந்த செல்வமணி மற்றும் காரை ஓட்டி வந்த பாலச்சந்திரன் ஆகிய இருவரும் சிவபாலனை தாக்க முற்பட்டதாகவும், அப்போது செல்வமணி கையில் வைத்திருந்த அரிவாளால் சிவபாலனை வெட்ட முயன்றதாகவும் கூறப்படுகிறது. அதை தடுத்த சிவபாலன் அரிவாளை பிடுங்கி செல்வமணியை தாக்கியதாக தெரிகிறது.
முன்விரோதம்
இதில் செல்வமணியின் முகம்,வயிறு, கழுத்து ஆகிய பகுதிகளிலும், சிவபாலனின் வலது கை மற்றும் தோல் பகுதியிலும் வெட்டு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த செல்வமணி மற்றும் சிவபாலனை சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
செல்வமணிக்கும், சிவபாலனுக்கும் கடந்த நான்கு வருடங்களாக முன்விரோதம் இருந்து வருவதாகவும் இதனால் இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் தொடர்பாக கார் ஓட்டி வந்த டிரைவர் பாலச்சந்திரனை (35) கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.