சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய கொத்தனார் கைது
புத்தளம் சந்திப்பில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய கொத்தனார் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மேலகிருஷ்ணன்புதூர்:
புத்தளம் சந்திப்பில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய கொத்தனார் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ரோந்து பணியில்...
நட்டாலம் அருகே நெடுவிளைவீடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 50). இவர் நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், நேற்று முன்தினம் காலை புத்தளம் சந்திப்பில் ஜெயராஜ் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹரிகுமார், டேவிட் ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக புத்தளத்தை சேர்ந்த எலெக்ட்ரிக் காண்டிராக்டர் சதீஷ் (43) மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் மற்றும் அவருடன் வந்த புத்தளம் அருகே உள்ள கல்லடிவிளையை சேர்ந்த கொத்தனாரான ராஜ்குமார் (50), இவரது மகன்கள் அபினேஷ் (21), ஆகாஷ் (20) ஆகிய 4 பேரும் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜை அவதூறாக பேசி, தாக்கியதுடன், மிரட்டல் விடுத்து சென்றனர். இதில் படுகாயமடைந்த ஜெயராஜ் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ஜெயராஜ் சுசீந்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் 4 பேர் மீதும் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கொத்தனார் ராஜ்குமாரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய மற்ற 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.