மாணவர்களின் புரிதலை கண்டறிந்து அதற்கு ஏற்ப கற்றுக்கொடுக்க வேண்டும்


மாணவர்களின் புரிதலை கண்டறிந்து அதற்கு ஏற்ப கற்றுக்கொடுக்க வேண்டும்
x

மாணவர்களின் புரிதலை கண்டறிந்து அதற்கு ஏற்ப பாடங்களை கற்றுக்கொடுக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் பழைய கலெக்டர் அலுவலக மக்கள் குறை தீர்வு கூட்டரங்க வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பொதுத் தேரிவுகள் ஆயத்தக் கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

மதிப்பெண் எடுத்தால் மட்டும் முடியாது

அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு தயாரிக்கப்படுகின்ற உணவுகள் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். உணவுகளில் காய்கறிகளை சேர்த்து சமைக்க வேண்டும். இந்தியாவில் உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு வைட்டமின் சி மற்றும் டி குறைபாடுகள் உள்ளது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கிறது. இதன் மூலம் மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அக்குழந்தைகள் விளையாட்டு செயற்பாடுகளில் பங்கு பெறுவது குறைவாக இருக்கும்.

பள்ளி, கல்லூரிகளில் படித்து மதிப்பெண் எடுப்பதால் மட்டும் வாழ்க்கையில் முன்னேற முடியாது. அதைத் தாண்டி திறமையை வளர்த்துக் கொள்வதில் மிகவும் முக்கிய பங்கு உள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. வருவாய்த் துறையின் மூலம் அங்கன்வாடி மையங்களுக்கு அருகாமையில் இருக்கின்ற அரசு புறம்போக்கு நிலங்களில் தோட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புரிதலை கண்டறிந்து...

அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளே தோட்டங்களை அமைக்க கற்றுகொடுக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்களுக்கு இயற்கை மீது ஆர்வம் ஏற்படும். செயற்கை உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி பொருட்களை விளைவிக்கின்ற பொழுது ஆரோக்கியமான உணவுகள் குழந்தைகளுக்கு கிடைக்கும்.

அனைத்து குழந்தைகளும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி எளிதாக புரியும்படி கற்றுத்தர வேண்டும். 7 வயதில் இருந்து 12 வயது வரை உள்ள குழந்தைகள் எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ள முடியும். அனைத்து குழந்தைகளுக்கும் எழுத்துக்களை எவ்வாறு கூட்டி படிக்க வேண்டும், எழுத்துக்களை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதை தெளிவாக கற்றுக் கொடுக்க வேண்டும். நாம் அனைவரும் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான புரிதல் மற்றும் கற்றுக்கொள்ளும் திறன் இருக்கும், அதை ஆசிரியர்கள் கண்டறிந்து அதற்கு ஏற்ப பாடங்களை கற்றுக்கொடுக்க வேண்டும்.

கல்விதான் அடுத்த தலைமுறைக்கு மிகச்சிறந்த ஒரு ஆயுதமாகும். ஆகவே அடுத்த தலைமுறை குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டுமென்றால் தலைமை ஆசிரியரான உங்களின் பங்களிப்பு மிக முக்கியம். நீங்கள் அனைவரும் பள்ளியில் பயிலும் மாணவர்களை நன்றாக படிக்க சிறப்பாக பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை (கல்வி) துணை இயக்குநர் ராஜா ஜெகஜீவன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், மாவட்ட கல்வி அலுவலர் ராஜா அண்ணாமலை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story