கறம்பக்குடி பகுதி கோவில்களில் உதவி கலெக்டர் ஆய்வு


கறம்பக்குடி பகுதி கோவில்களில் உதவி கலெக்டர் ஆய்வு
x

கறம்பக்குடி பகுதியில் உள்ள சில கோவில்களில் வழிபாடு நடத்த பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து புதுக்கோட்டை உதவி கலெக்டர் அந்த கோவில்களில் ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை

உதவி கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 9 கோவில்களில் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்பாக மனு அளித்துள்ளார்.

இன்னும் அந்த வழக்கு விசாரணைக்கு வராத நிலையில் வழிபட மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படும் முள்ளங்குறிச்சி முத்து மாரியம்மன் கோவில், கறம்பக்குடி கருப்பர் கோவில், வடக்களூர் முத்து மாரியம்மன் கோவில், திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவில், ஆத்தங்கரை விடுதி செனயாத்தம்மன் கோவில், வேம்பன் பட்டி முருகன் கோவில், நெடுவாசல் சிவன் கோவில் உள்ளிட்ட 9 கோவில்களில் புதுக்கோட்டை உதவி கலெக்டர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

நீதிமன்ற விசாரணையின் போது வழங்கப்படும்

அப்போது அனைத்து சமூக மக்களிடமும் விசாரணை செய்து கருத்துகளை கேட்டறிந்தனர். அதில் பட்டியலின மக்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாகவே இணைந்து அந்தந்த கோவில்களில் வழிபாடு செய்வதை உறுதி செய்தனர். மேலும் பட்டியலின மக்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களுடன் சேர்ந்து அதிகாரிகள் கோவில்களில் வழிபாடு செய்தனர். இதுகுறித்து உதவி கலெக்டர் முருகேசன் கூறுகையில், இந்த ஆய்வின் அறிக்கை நீதிமன்ற விசாரணையின் போது வழங்கப்படும் என தெரிவித்தார்.


Next Story