திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் ஆயுதப்படைக்கு மாற்றம்


திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் ஆயுதப்படைக்கு மாற்றம்
x

திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

திருச்சி

திருச்சி மாநகர போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளின் பின்னணியை ஆராய்ந்து கமிஷனரின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்வது நுண்ணறிவு பிரிவு போலீசாரின் பணியாகும். இதுதவிர அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி, போதைப்பொருள், சட்டவிரோத மதுவிற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களை தடுப்பதிலும் நுண்ணறிவு பிரிவு போலீசாரின் பங்களிப்பு அதிகம். இந்தநிலையில் திருச்சி தென்னூர் உழவர்சந்தை அருகே பழமையான தர்கா கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம ஆசாமிகளால் இடிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக நுண்ணறிவு போலீஸ் உதவி கமிஷனர் செந்தில்குமார் மாநகர போலீஸ் கமிஷனருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை என்றும், தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் கூறி அவரை ஆயுதப்படைக்கு செல்ல கமிஷனர் சத்தியப்பிரியா நேற்று முன்தினம் மாலை உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆயுதப்படைக்கு சென்ற உதவி கமிஷனர் செந்தில்குமார் நேற்று முன்தினம் இரவு மீண்டும் கமிஷனர் அலுவலகம் வரவழைக்கப்பட்டதாகவும், பின்னர் திடீர் விடுப்பில் சென்று விட்டதாகவும் காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவித்தன. திருச்சி மாநகர நுண்ணறிவுபிரிவு உதவி கமிஷனர் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட விவகாரம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story