சேலம் லீ பஜார் பகுதியில் பத்திர எழுத்தரின் உதவியாளர் குட்டையில் மூழ்கி பலி
சேலம் லீ பஜார் பகுதியில் பத்திர எழுத்தரின் உதவியாளர் குட்டையில் மூழ்கி பலியானார்.
சேலம் லீ பஜார் மேம்பாலத்தின் கீழ் ரெயில்வே தண்டவாளம் அருகே சுமார் 4 அடி ஆழமுள்ள குட்டையில் தண்ணீர் தேங்கி உள்ளது. நேற்று காலை இந்த குட்டையில் மூழ்கி 37 வயதுடைய ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அந்த ஆணின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த சீனிவாசன் (வயது 37) என்பதும், பத்திரம் எழுதும் ஒருவருக்கு உதவியாளராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் சீனீவாசன் மதுபோதையில் குட்டைக்குள் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த குட்டையில் ஏற்கனவே 2 பேர் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. எனவே அடிக்கடி உயிர்பலி வாங்கும் இந்த குட்டையை உடனே மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இந்த குட்டையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.