வெண்டைக்காய் சாகுபடி செய்த வயலை தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆய்வு
திருத்துறைப்பூண்டி அருகே வெண்டை க்காய் சாகுபடி செய்த வயலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் இளவரசன் ஆய்வு செய்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே வெண்டை க்காய் சாகுபடி செய்த வயலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் இளவரசன் ஆய்வு செய்தார்.
வெண்டைக்காய் விதை
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தில் இந்த ஆண்டு தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டமான மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் காய்கறி பரப்பு விரிவாக்கம் என்ற இனத்தில் விவசாயிகளுக்கு வெண்டை விதைகள் வழங்கப்பட்டது.
தற்போது அந்தவெண்டை விதையின் நிலை குறித்து திருத்துறைப்பூண்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் ஆய்வு செய்தார். தொடர்ந்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட அதிதி வெண்டை விதையானது தற்போது பூத்து காய்களுடன் இருப்பதை பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கத்தரி, மிளகாய் குழித்தட்டு நாற்று
தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் மூலம், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இந்த வட்டாரத்திற்கு வெண்டைவிதை வழங்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டு மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கத்திரி காய்கறி குழித்தட்டு நாற்று மற்றும் மிளகாய் காய்கறி குழித்தட்டு நாற்று வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ஒரு எக்டேருக்கு 12 ஆயிரத்து 500 காய்கறி குழித்தட்டு நாற்றுகளும் மற்றும் இயற்கை இடுபொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூ.20 ஆயிரம் மதிப்பில் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
மானியம் தேவைப்படும் விவசாயிகள்...
வெண்டை மானியம் முடிவடைந்த நிலையில், கத்தரி மற்றும் மிளகாய் குழித்தட்டு நாற்றுகள் மானியம் தேவைப்படும் விவசாயிகள், கணினி சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல் மற்றும் புகைப்படம் இரண்டு ஆகியவற்றை தோட்டக்கலை உதவி இயக்குனர் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம்.
அல்லது உழவன் செயலி மூலம் விண்ணப்பித்தும் மானியம் பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார். இந்த ஆய்வில் தோட்டக்கலை உதவி அலுவலர் கார்த்திகேஷன் உடன் இருந்தார்.