மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார்.
மதிப்பீட்டு முகாம்
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மத்திய அரசின் அதிகாரமளிப்பு துறையின் கீழ் செயல்படும் அலிம்கோ நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் நேற்று நடந்தது.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த இந்த முகாமை மாவட்ட கலெக்டர் பூங்கொடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, தொழில் தொடங்க கடனுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்றடையும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
7 இடங்களில்...
இதன் ஒரு கட்டமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம்கள் மாவட்ட பகுதிகளில் நடத்தப்பட உள்ளது. இன்று (அதாவது நேற்று) திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் திரளாக பங்கேற்றனர்.
இவர்களுக்கு உரிய பரிசோதனை செய்யப்பட்டு உபகரணங்கள் வழங்குவதற்கான பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், நத்தம் என மாவட்டம் முழுவதும் 7 இடங்களில் இந்த முகாம் நடத்தப்பட இருக்கிறது. நாளை (அதாவது இன்று) ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 5-ந் தேதி ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும், 7-ந்தேதி நத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 8-ந்தேதி கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 9-ந்தேதி நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 10-ந்தேதி பழனி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 11-ந்தேதி வேடசந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் மதிப்பீட்டு முகாம்கள் நடக்கின்றன.
சிறப்பு சக்கர நாற்காலி
இந்த முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம், சக்கர நாற்காலி, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி, காதொலிகருவி, முடநீக்கு சாதனம், செயற்கை கால், ஊன்று கோல், ரோலேட்டர், பார்வையற்றோருக்கு அதிரும் ஊன்று கோல் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
எனவே உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை நகல், அடையாள அட்டை, 5 புகைப்படம் மற்றும் யு.டி.ஐ.டி. கார்டு நகல் ஆகிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார். முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன், திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாத்துரை, அலிம்கோ குழுவினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.